அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயில்

இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் #புளியரை

#தென்காசிமாவட்டம் : அருள்மிகு #சதாசிவமூர்த்தி திருக்கோயில்

குரு ஸ்தலம்:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக தட்சிணாமூர்த்தி சன்னதி சிவாலயத்தின் தெற்கு பிரகாரத்தில் தெற்கு நோக்கி இருக்கும். ஆனால், இத்தலத்தில் மூலவருக்கும், வாசலில் உள்ள நந்திக்கும் நடுவே உள்ளது. புளிய மரத்தின் அடியில் சிவன் அருட்காட்சி தந்ததால், புளியரை என்றழைக்கப்படும் இவ்வூர், சிறிய சிருங்கேரி என்ற சிறப்பு பெயருடனும் அழைக்கப்படுகிறது.

தல புராணம்:

ஒரு காலத்தில் தில்லை சிதம்பரம் கோயிலுக்கு அவைதீக மதத்தினரால் தீங்கு வந்தது. தில்லை தீட்சிதர் மூலவரை அவைதீகர் திருடிச் செல்வரோ என அஞ்சினர். அதனால் கருவறை படிமத்தை எடுத்துக் கொண்டு தென்திசை நோக்கி வந்தனர். அவர்கள் பொதிகைமலையைக் கடந்து சேரநாட்டு எல்லைக் காட்டுக்கு வந்தனர்.

அந்த காடு மூங்கில் மரங்களும் புளியமரங்களும் நிறைந்ததாக இருந்தது. பகலிலும் இருள் சூழ்ந்த அந்தக் காட்டில் நடராஜரின் படிமத்தை மறைத்து வைக்க விரும்பினர்.

அப்போது வானத்தில் ஒரு கருடன் வட்டமிட்டது, அதை அடையாளமாக வைத்து ஒரு புளியமரத்தை தேர்வு செய்தனர். அந்த புளியமரத்தில் இருந்த பொந்தில் தில்லை மூலவர் படிமத்தை மறைத்து வைத்துவிட்டு தங்கள் ஊரான தில்லைக்கு திரும்பி சென்றனர். அந்த மரம் இருந்த பகுதி தனியார் ஒருவருக்கு சொந்தமானது. அவர் புளிய மரத்திலிருந்த படிமத்தைக் கண்டு மகிழ்ந்து அப்படியே வைத்து வழிபட்டார். ஆண்டுகள் பல உருண்டோடிச் சென்றன. தில்லையில் சமயப் பகை நீங்கியது. தீட்சிதர்கள் மூலவரைத் தேடி தென்திசை வந்தனர். மூலவரை வைத்த இடம் அவர்களுக்கு மறந்து விட்டது, வைத்த இடம் தெரியவில்லை. அந்த தீட்சிதர்கள் மனம் வருந்தி கண்ணீர் மல்க தில்லை நோக்கி கைகூப்பி நடராஜரை தொழுதனர்.

அந்த சமயத்தில் ஒரு அசரீரி ஒலித்தது. சாரை சாரையாய் எறும்பு செல்லும் வழி செல்லுங்கள் என கேட்டது. தீட்சிதர்களும் அவ்வாறே சென்றனர். தங்களின் நாயகன் மரப் பொந்தில் வழிபடுகோலமாய் இருப்பதைக் கண்டனர். கண்ணீர் மல்க அந்த மூர்த்தியை எடுத்துச் சென்றனர். சில நாட்கள் கழிந்தன. அந்த புளியமரத் தோட்டத்தின் உரிமையாளர் வந்தார் தான் வழிபட்ட நடராஜரைக் காணாமல் திகைத்தார், அழுதார், தான் கண்டதை ரகசியமாய் வைத்ததால் இப்படி ஆனதோ என நெகிழ்ந்தார்.

இச்சமயத்தில் அவர் நின்ற இடத்தில் பூமி அசைந்தது. அதிலிருந்து சுயம்புலிங்கம் தோன்றியது. அவர் பரவசமானார். இச் செய்தி எங்கும் பரவியது. அப்போது அப்பகுதியை ஆண்ட அச்சன்கோயில் அரசனும் அறிந்தார். அவரது கனவில் சிவபெருமான் தோன்றி அங்கே கோயில் கட்டப் பணித்தார். அரசரும் அங்கு ஒரு சிறிய கோயில் கட்டினார்.

புளியரை ஆன வரலாறு :

தல புராணத்தில் கண்டவாறு இன்னொரு வரலாறும் வழங்கப்படுகிறது. கேரளம் கொட்டாரக்கரை அரசனுக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தது. அரசர் சிவனை வேண்டினார். சிவபெருமான் கனவில் தோன்றி புளியறை காட்டில் தான் சுயம்புவாக தட்சிணாமூர்த்தியாக இருப்பதைக் கூறி கோயில் கட்டுவதற்கு கட்டளையிட்டார். அரசரும் ஆண்டவரின் கட்டளைக்கிணங்க அப்படியே செய்தார். புளியமரத்தின் அடியில் தோன்றியதால் புளியறை ஆனது.

திருக்கோயில் அமைப்பு:

சிவனுக்கும் அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு சன்னதிகளுக்கும் இடையே திருக்கல்யாண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சிவன் வடக்குபுறமும் அம்பாள் தெற்குபுறமும் நின்று அருள் பாலிக்கின்றனர்.. சிவன் சன்னதிக்கு முன்புறம் தட்சிணாமூர்த்தி சன்னதி அமைந்துள்ளது. சிவனையும் தட்சிணாமூர்த்தியையும் ஒன்றாக தரிசிக்கலாம்.

அமைவிடம்:

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் செங்கோட்டையிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவிலும், குற்றலத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலும் திருநெல்வேலியிலிருந்து சுமார் அறுபத்தி ஏழு கிலோமீட்டர் தொலைவிலும் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இறைவன் : தட்சிணாமூர்த்தி

இறைவி : சிவகாமி

தல விருட்சம் : புளியமரம்

தோஷம் நீங்கும்

சிவாலயமாக இருந்தாலும் தெட்சிணாமூர்த்திக்கே மதிப்பு. குருபரிகார ஸ்தலமாக திகழும் இங்கு வியாழக் கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் மிகவும் அதிகளவில் உள்ளது. சதாசிவமூர்த்திக்கு வலப்புறம் அருள்பாலிக்கும் அம்பாள் சிதம்பரத்திலிருந்து கொண்டு வரப்பட்டமையால் சிவகாமி அம்பாள் என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறாள்.

கோயிலுக்குள் நுழைய 27 படிக்கட்டுகள் அமைக்கப் பட்டுள்ளன. இவை 27 நட்சத்திரங்களாக கருதப் படுகின்றன. ஜாதகதோஷம் உள்ளவர்கள் இந்தப் படிகளில் ஏறிச் சென்று, சிவனை பூஜித்தால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. அனைத்து நட்சத்திரக்காரர்களும், குருவாரமாகிய வியாழக்கிழமைகளில் இங்கு வந்து படிபூஜை செய்து, ஸ்வாமி, அம்பாள் மற்றும் ஸ்ரீ யோக தட்சிணாமூர்த்தியை மனமுருகி வழிபட்டால், சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

Tag :  Guru Temple: Sadasiva Murthy temple Puliyarai | Sadasivamurthy Temple Dakshinamurthy Temple Puliyarai | guru bhagavan temple | puliyarai sadasiva murthy dakshinamurthy temple | sadasiva moorthy temple tirunelveli | MAHA SADA SHIVA MOORTHI | Temples in Tamil Nadu

Related Videos