சனி மகாபிரதோஷம் சகல வினைகளையும் போக்கும்.

சனி மகாபிரதோஷ நாளில் சிவ தரிசனம்ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும்.  

நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும்; அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

சனிப்பிரதோஷ நாளில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, ஆலயத்தில் உள்ள மற்ற சந்நிதிகள் திரையிடப்பட்டு இருக்கும். பிரதோஷ நாளில் மற்ற ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.

நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும்.

பிரதோஷ நாளில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது.

மற்ற பிரதோஷ நாளில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெபதபங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத் தரும் என்பது புராணங்கள் தெரிவிக்கும் தகவல்.

பிரதோஷ நேரத்துக்குள் சிவனுக்கான அபிஷேக ஆராதனைகள், தரிசனம், புறப்பாடு என எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிவதால் அதன்பின்னர் செய்யும் வழிபாடுகள் அந்திபூஜைதான் என்பதால் அது பிரதோஷ வழிபாடு ஆகாது.

சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.

சனிப் பிரதோஷ நாளில் ஈசனை வழிபாடு செய்தால், ஐந்து வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

இந்நாளில் வசதி உள்ளவர்களும், அடியார்களும் இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தால் நல்லது.

ஏகாதசியன்று ஆலகாலம் உண்ட ஈசன் துவாதசி முழுவதும் மயக்க நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா வேளையில் எழுந்து, சூலத்தை சுழற்றி டமருகத்தை ஒலித்து சந்தியா நிருத்தம் எனும் நாட்டியம் ஆடினார். பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐவகை தொழிலையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஈசனால் ஆடப்பட்டது என்கிறார்கள்.


Related Videos