சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுவது ஏன்?

எல்லா உயிர்களுக்கும் அமுது படைக்கும் ஆண்டவனுக்கு நாம் நன்றி செலுத்தும் வைபவம்தான், அனைத்து சிவன்கோயில்களிலும் அன்னாபிஷேகமாக மேற்கொள்ளப்படுகிறது. அன்னத்தின் சிறப்பை விளக்க ஆலவாய் அழகனே ஒரு திருவிளையாடல் புரிந்தான். அதாவது தானே ஒரு கொப்பரையைக் கையிலேந்தி, உணவுக்காக பூவுலகில் அலைந்து திரிந்தான் அந்த திரிபுராந்தகன் பிரம்மனின் ஆணவத்தை அடக்குவதற்காக அவனுடைய ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளப்போக, அவ்வாறு கிள்ளப்பட்ட தலைதான் சிவனுடைய கையில் கொப்பரையாக ஒட்டிக்கொண்டுவிட்டது. யார் பிச்சை இடும் போது அந்த கொப்பரை நிறைகிறதோ அப்போது அந்த தலை சிவனின் கையை விட்டு விலகுமென்பது விதி. அந்த வகையில் காசிக்கு வரும் ஐயன், அன்னை அன்னபூரணியிடம் பிச்சை பெறுகிறான். அமுதிட்ட அன்னையின் அன்பும் கொப்பரையை நிறைவிக்க, தலை சிவனுடைய கையிலிருந்து விடுபடுகிறது. அந்த அன்ன பூரணிக்கு காசியில் தனிக்கோயிலே அமைந்திருப்பதிலிருந்து அன்னபூரணியின் அருமைஅனைவருக்கும் புரியும்.


பரம்பொருள் அன்ன வடிவாகவே இருக்கிறதென்று வேதங்கள் சொல்கின்றன. எங்கும் நிறைந்திருக்கும் சக்தி, அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் உணவுப் பொருளாக அன்னமாக உள்ளது. மிகமிக அடிப்படைத் தேவையான பசியைப் போக்கியருளும் ஆண்டவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்தான் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதப் பவுர்ணமி தினத்தன்று பிரபலமான சிவத் தலங்களில் இந்த சம்பிரதாயம் மேற்கொள்ளப்படுகிறது. அன்னாபிஷேகத்தின்போது சாற்றப்படும் அன்னப்பருக்கை ஒவ்வொன்றுமே லிங்க சொரூபம் என்பது நம்பிக்கை. ஆக, அவ்வாறு அபிஷேகிக்கப்படும். அன்னத்தை இறைவனின் பிரசாதமாக ஏற்றுக்கொள்வது மகிமைவாய்ந்தது. ஐப்பசி மாதப் பவுர்ணமி தினத்தில் இறைவனுக்கு சாற்றப்படும் அன்னம் மாலைவரை, அப்படியே இருக்கும். மாலை பூஜை முடிந்தபிறகு, அன்னம் கலைக்கப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அந்த அன்னத்தில் ஒரு பகுதி நீர்நிலைகளில் இடப்படுகிறது. அங்கு வாழும் உயிரினங்களும் அன்னபிரசாதத்தை அடையுமாறு செய்யும் பரந்த நோக்கம்தான்.


லிங்கத்தில் சாற்றப்பட்ட அன்னம் தவிர, ஆவுடையார் போன்ற லிங்கத்தின் பிற பகுதிகளில் சாற்றப்பட்ட அன்னத்தில் தயிர் கலந்து, அதை வந்திருக்கும் பக்தர்களுக்கு விநியோகிக்கிறார்கள். லிங்கத்தில் சாற்றப்பட்ட அன்னத்தை நீர்நிலைகளில் கரைக்கிறார்கள். இந்த அன்னாபிஷேக வைபவத்தைக் காணும் பேறு பெற்றவர்களுக்கு வாழ்வில் எந்நாளும் உணவுப்பஞ்சம் ஏற்படாது என்பது காலங்காலமாய் நிலவிவரும் நம்பிக்கை மழலைச் செல்வத்துக்காக ஏங்கிநிற்கும் பெண்மணிகள் அன்னாபிஷேகப் பிரசாதத்தை உட்கொண்டால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டுமென்பதும் நம்பிக்கை. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் போன்ற பிரம்மாண்டமான கோயில்களில் இந்த அன்னாபிஷேகம் பெரிய அளவில் நடைபெற்று பக்தர்களின் கண்களையும் மனதையும் குளிர்விக்கின்றன.


இந்த அபிஷேகத்திற்காக புத்தம் புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெல்லிலிருந்து எடுக்கப்பட்ட அரிசி, மூட்டை மூட்டையாகக் கோயிலுக்குக் கொண்டுவரப்படுகிறது. அது அப்படியே சமைக்கப்பட்டு பெரிய பெரிய பாத்திரங்களில் நிரப்பப்பட்டு, லிங்கத்தின்மீது அபிஷேகம் செய்யப்படுகிறது. அருகிலுள்ள சிவன்கோயில்களில் அன்னாபிஷேகம் நடக்குமானால் சென்று கலந்து கொள்ளுங்கள். எம்பெருமானை கண்குளிர, உள்ளம் குளிர தரிசித்து, அன்னாபிஷேக பிரசாதத்தை உட்கொண்டு என்றுமே பஞ்சம் பட்டினி இல்லாத வளமான வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்.

Related Videos