நவராத்திரி விழா ஸ்பெஷல்

பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தால் தான் வரமுடியும் !

தமிழகத்தில் ஸ்ரீலலிதாம்பாள் எனும் திருநாமத்துடன் அம்பிகை குடியிருந்து அருள்பாலிக்கும் ஆலயங்கள் மிக அரிதுதான்.

இந்தத் திருநாமத்தில் அருள்பாலிக்கும் தலம் திருமீயச்சூர் திருத்தலம் மட்டுமே என்கிறார்கள் பக்தர்கள்.

சூரியனின் ரதத்தினைச் செலுத்துகிற அருணன் அங்க ஹீனம் கொண்டவன். அவனுக்கு திருக்கயிலாயத்துக்குச் சென்று சிவனாரைத் தரிசிக்கவேண்டும் என்பதே நீண்டகால ஆசை!

சூரியனிடம் அனுமதி கேட்டதற்கு, மறுத்ததுடன் உடற் குறையைச் சொல்லி ஏளனம் செய்தான். சிவபக்தியில் திளைத்திருந்த அருணன், மோகினிப் பெண்ணாக உருவெடுத்தான். திருக்கயிலாயம் புறப்பட்டான்.

அங்கே, மோகினியின் அழகில் மயங்கினான் இந்திரன். இதில் உருவானவன்தான் வாலி. இறைவனைத் தரிசிப்பதற்கு ஆசைப்படும் ஒருவருக்கு, முட்டுக்கட்டை போடுவதும் ஒருவரது அங்கக் குறைபாட்டை சுட்டிக்காட்டி ஏளனம் செய்வதும் மகாபாவம். சூரிய பகவான் இந்த இரண்டு பாவங்களையுமே செய்தார்!

திருகயிலாயத்தில்… சிவதரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில், திரும்பி வந்த அருணன், சூரியனாரிடம் விஷயத்தைச் சொன்னான். ‘மோகினிப் பெண்ணாகவா? உருவம் மாறிச் சென்றாயா? எங்கே மாறிக்காட்டு’ என்றார்.

அருணன், மோகினியாக மாறினான். அவளது அழகில் சூரியனும் மயங்கினான். விளைவு… சுக்ரீவன் பிறந்தான்.

தனது பக்தனைத் தடுத்து, அவனது ஊனத்தைக் கிண்டல் செய்ததைச் சும்மா விடுவாரா, சிவனார்? சூரியனைச் சபித்தார்.

உலகுக்கே வெளிச்சம் தந்த இருளடைந்து போனார் சூரியனார். ‘ஏழு மாதங்கள், மேகமண்டலத்தில் எங்களை யானை மீது வைத்து பூஜித்து வா. அப்போதுதான் உனது சாபம் தீரும்’ என அருளினார்.

இதையடுத்து சூரியனார், மேகமண்டலத்தில் யானை மீது, சிவ-பார்வதியை வைத்து பூஜை செய்யத் துவங்கினார்.

ஆனால், ஏழு மாதங்கள் நிறைவுறுவதற்கு முன்பே, சிவனாரிடம் சென்று, ‘என்ன இது… இன்னும் சாப விமோசனம் தரவில்லையே?’ எனக் கேட்க… வெகுண்டாள் ஸ்ரீபார்வதி.

‘உரிய காலம் வரும்வரை பொறுக்க மாட்டாயா?’ என்று கடும் உக்கிரத்துடன் சூரியனாருக்குச் சாபம் கொடுக்க எழுந்தாள்.

பதறிப்போன சிவனார், ஏற்கெனவே கொடுத்த சாபத்தால் இருளில் மூழ்கினான் சூரியன். இன்னொரு சாபம் கொடுத்தால், இந்த உலகம் இருளில் விழிபிதுங்கித் தவிக்கும்.

வேண்டாம் தேவி, சாந்தமாக இரு!’ என்று உமையவளை அமைதிப்படுத்தினார்.

பிறகு உரிய காலம் வந்ததும், சூரியனாருக்குச் சாப விமோசனம் அளித்தார். அவரின் திருமுகமும் இந்த உலகமும் பழையபடி இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வந்தது!

சூரியனாருக்கு அருளிய ஈசன், ஸ்ரீமேகநாதர் எனும் திருநாமத்துடன், கஜபிருஷ்ட விமானத்தின் கருவறையில், அனைவருக்கும் அருள்புரிந்து வருகிறார்.

அந்தத் திருத்தலம், திருமீயச்சூர். இங்கே, ரதசப்தமி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

சித்திரை மாதம் 21-ம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை, ஸ்வாமியை தனது கதிர்களால், பூஜிக்கிறார் சூரிய பகவான்!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது திருமீயச்சூர் தலம். இந்தத் தலத்துக்கு ஏகப்பட்ட பெருமைகள் உள்ளன. ஸ்ரீசனீஸ்வரர், எமதருமர், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் ஆகிய ஆறு பேரின் அவதாரத் திருத்தலம் இது!

திருமீயச்சூர் தலத்துக்கு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் என எங்கிருந்தெல்லாமோ ஏராளமான அன்பர்கள், தினமும் வந்தபடி இருக்கின்றனர்.

சிலிர்ப்பும் பக்தியும் பொங்க, தரிசித்துச் செல்கின்றனர். காரணம்… இந்தத் தலத்தின் நாயகி, ஸ்ரீலலிதாம்பாள்!

உலகின் எல்லா இடங்களில் இருந்தும், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து, அவளை அனுதினமும் மனமுருகிப் பிரார்த்திப்பவர்கள் மிக மிக அதிகம்! அதனைப் பாராயணம் செய்தாலே, மன பாரமெல்லாம் போய்விடும்.

அப்பேர்ப்பட்ட, சக்தியும் சாந்நித்யமும் கொண்ட ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான திருத்தலம், திருமீயச்சூர்!

பண்டாசுரன் எனும் அரக்கனால், துன்பங்களுக்கு ஆளான தேவர்கள், ஈசனின் திருவடியைச் சரணடைந்து கதறினர். அரக்கனை அழிக்க, ஸ்ரீபார்வதியை ஸ்ரீலலிதையாக அவதரிக்கச் செய்தார் ஈசன்.

கடும் உக்கிரத்துடன் தோன்றிய ஸ்ரீலலிதை, சகஸ்ர கோடி வருடங்கள், அரக்கனுடன் யுத்தம் செய்தாள். இறுதியில் அவனை அழித்தொழித்தாள். ஆனாலும் அவளது உக்கிரம் தணியவில்லை.

இந்தக் கோபம், பூமிக்கும் மக்களுக்கும் நல்லதல்ல’ என்பதால், ‘ஸ்ரீபுரத்தில் தவம் செய்தால், உனது உக்கிரம் தணியும்’ என அருளினார் சிவபெருமான். இதையடுத்து ஸ்ரீலலிதை ஸ்ரீபுரத்துக்கு வந்தாள்.

அங்கே கடும் தவம் புரிந்தாள். அவளுக்குள்ளிருந்து ‘வாக் தேவதைகள்’ எட்டுப்பேர் வெளிவந்தனர். ஸ்ரீலலிதையைச் சுற்றி வட்டமாக நின்றனர்.

ஸ்ரீலலிதையின் கூந்தல், கண்கள், கன்னம், நெற்றி, திருப்பாதம் என அவளது அழகை வியந்து, பாடினர்.

‘அடடா… இத்தனை அழகா எனது கண்கள்? பிறகு ஏன் இவ்வளவு கொடூரமாகப் பார்க்கவேண்டும்?! என் கன்னமும் நெற்றியும் அழகு பொருந்தியிருக்கிறதா? அப்புறம் எதற்காக, முகத்தை உக்கிரமாக வைத்திருக்கவேண்டும்? நெடுநெடுவென, கரிய நிறத்தில் வளர்ந்திருக்கிறதாமே கூந்தல்? அந்தக் கூந்தலை தலைவிரி கோலமாகவா வைத்திருப்பது?!’ என யோசித்தாள்.

எட்டுத் தேவதைகளும் அந்த ஸ்தோத்திரத்தைப் பாடப்பாட… அவளது உக்கிரம் காணாமல் போனது. அவளுக்குள் சாந்தமும் கருணையும் பொங்கிப் பிரவாகித்தன! அதே தலத்தில் இருந்தபடி, அன்பர்களுக்கு அருட்கடாட்சத்தை அள்ளித்தர திருவுளம் கொண்டாள்.

இதோ… இன்றளவும், உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு, லலிதா சகஸ்ரநாமத்தை எவர் பாடினாலும், அவர்களது சகல தோஷங்களையும் போக்கி, சகல ஐஸ்வரியங் களைத் தந்து மகிழ்கிறாள். மகிழ்விக்கிறாள்.

இங்கே, ஸ்ரீசதாசிவ லிங்க பீடத்தில்,

ஸ்ரீசக்ரத்தில் இருந்தபடி, அகில உலகையும் ஆட்சி செய்கிறாள், ஸ்ரீலலிதாம்பிகை!

ஹயக்கிரீவர் அகத்திய முனிவருக்கு

லலிதா சகஸ்ரநாமம் பெருமையைப் பற்றி விவரித்தார்.

இதைக்கேட்ட அகத்தியர்,

"லலிதா சகஸ்ரநாமத்தை

எத்தலத்தில் கூறினால் முழுப்பலன்

கிடைக்கும்?'' என கேட்டார்.

அதற்கு ஹயக்கிரீவர்,

"பூலோகத்தில் அம்பாள் மனோன்மணியாக வீற்றிருக்கும் இடத்திற்குச் சென்று சொன்னால் பூரண பலன் கிடைக்கும்''என்றார்.

திருமீயச்சூர் லலிதாம்பிகை

ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில்

அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த

முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி

செய்கிறாள். வலது காலை மடித்த

அம்பிகையைக் காண்பது அரிது.

அகத்தியர் தன் மனைவி

லோப முத்திரையுடன் திருமீயச்சூர்

சென்று இவ் லலிதாம்பிகையை தரிசித்து

"லலிதா சகஸ்ரநாமம் "

சொன்னார். அம்பாள் மகிழ்ந்து

அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக

தரிசனம் தந்தாள்.

அப்போது அகத்தியர்,

"லலிதா நவரத்தின மாலை"

என்னும் ஸ்தோத்திரம் பாடினார்.

வருடம் முழுவதும், இங்கே தேர்க்கூட்டம், திருவிழாக் கூட்டம்தான்! ஸ்ரீலலிதாம்பிகைக்கு அன்னப்பாவாடை சார்த்தும் வைபவம், வருடத்தில் மூன்று முறை நடைபெறுகிறது.

நவராத்திரியில்… விஜயதசமியிலும், மாசி மாதத்தின் அஷ்டமி நாளிலும், வைகாசி – பௌர்ணமியின் போதும் அன்னப்பாவாடை சார்த்தும் வைபவத்தைக் காண, வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

கருவறைக்கு முன்பாக 15 அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர்.

அத்துடன் புளி சாதம், தயிர்சாதம்

போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும்.

சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம்

போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக்கொண்டு நிரப்புவர்.

அதன் பின்னர் கருவறையின் திரையை

விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட

அம்மனின் உருவம் நெய் குளத்தில்

பிரதிபலிக்கும்.

இதனை தரிசிப்பவர்களுக்கு

மறுபிறவியே கிடையாது.

இதுதான் நெய்க்குள தரிசனம்.

நவராத்திரி நிகழ்வின் மிகவும் பிரசித்தி

பெற்ற தரிசனம்.

திருமீயச்சூரில் உள்ள அருள்மிகு

லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில் மட்டுமே கிடைக்கப் பெறும் தரிசனம்.

இதோ உங்களுக்காக!

தேவி சரணம் ! ஸ்ரீ மாத்ரே நமஹ !

Related Videos