திருவண்ணாமலை கிரிவல ரகசியங்கள் ....

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

கண்ணாரமுதக் கடலே போற்றி.

தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். 

புனித நகரமாகக் கருதப்படும் இந்நகரில், புகழ்பெற்ற (நினைத்தாலே முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான) 

அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது.

● 171 அடி உயரம் கொண்டது அம்மணியம்மாள் கோபுரம். விஜயநகர மன்னர்களால் தொடங்கிய இந்த கோபுரப்பணி, பாதியில் நின்றது. இதைக் கட்டி முடித்த அம்மணியம்மாளின் பெயர் தற்போது வழங்கப்படுகிறது.

● திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை சிறப்பிக்கும் விதத்தில், அகல் தீபமிட்ட சித்திர முத்திரையை 1997 டிச.12ல் அஞ்சல்துறை வெளியிட்டது.

● அண்ணாமலையாரின் ஆடைகள் உள்ள அறை வஸ்திர கொட்டடி, பொக்கிஷ அறை அருகில் உள்ளது.

● மலையைச் சுற்றி எட்டு நந்திகள் உள்ளன. ராஜகோபுரம் எதிரிலுள்ள சர்க்கரைக் குளக்கரையில் உள்ளது முதல் நந்தி.

● பஞ்சமுக சாமி என்னும் இசக்கி சுவாமிகள், திருவண்ணாமலையை 1008 முறை அங்கப்பிரதட்சணம் செய்தவர். இல்லறத் துறவியான இவர் 1959ல் திருவண்ணாமலை வந்தார்.

● திருமூலர் பாடிய திருமந்திரத்தில் அடி முடி தேடிய, திருவண்ணாமலை வரலாறு குறித்த ஒன்பது பாடல்கள் உள்ளன. 

● ஓய்வில்லாமல் அன்னதானம் அளிக்கும் மடம் திருவண்ணாமலை திருவூடல் தெருவிலுள்ள ஓயாமடம். மழை போல வள்ளல் தன்மை கொண்டதால் ஓயாமாரி மடம் என்றும் சொல்வர்.

● செவ்வாயன்று திருவண்ணாமலையை சுற்றினால் மோட்சம் கிடைக்கும் என்றவர் சேஷாத்ரி சுவாமிகள்.

● மாசி மாதத்தில் முதல் ஐந்து நாள் அம்மன் சன்னதியில் சூரிய ஒளிபடும். தினமும் அம்மனின் முகத்தில் படும் ஒளி, சிறிது சிறிதாக பாதம் வரை இறங்கும்.

● லிங்கோத்பவர் தோன்றிய தலம் அண்ணாமலை. கருவறையின் பின்புறம் இவரது சன்னதி உள்ளது.

● திருவண்ணாமலையின் தலவிருட்சம் மகுட மரம். மகிழ மரம், வடவால விருட்சம் என்றும் சொல்வதுண்டு.

● ராஜகோபுரத்தின் கீழ்தளத்திலுள்ள தூண்களில், பரதநாட்டியத்தின் 108 கரணங்கள் 

சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன.

● அக்னி நட்சத்திர காலத்தில் அண்ணாமலையாருக்கு வாசனை திரவியம் கலந்த குளிர்ந்த நீரில் அபிஷேகம், தயிர் சாதம் படைத்து, நீர் சொட்டும் தாராபாத்திரத்தை 

லிங்கத்தின் உச்சியில் வைப்பர்.

● ரமணாசிரம வளாகத்தில் தலைவலி சாமி சமாதி உள்ளது. தலைவலி குணமாக பக்தர்கள் இங்கு சுற்றி வந்து வழிபடுகின்றனர். 

● கார்த்திகை தீபத்திற்கு மறுநாளும், தை மூன்றாம் தேதியும் அண்ணாமலையார் மலை சுற்றி வருவார்.

● மலை மீதுள்ள முலைப்பால் தீர்த்தத்தை சீர்படுத்தியவர் நரிக்குட்டி சுவாமிகள். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர், சிவபக்தராக மாறினார். 

தமிழில் சரளமாக பேசுவார். 

● திருவண்ணாமலைக்கு தென்திசை கைலாயம், கவுரி நகரம், சுத்த நகரம், ஞானபுரி என பெயர்கள் உண்டு. 

● இங்கிலாந்து அறிஞர் பால்பிரண்டன் எழுதிய நூலில் திருவண்ணாமலை, ரமணர் பற்றிய குறிப்புகள் உள்ளன.

● திருவண்ணாமலை கோயில் கோபுரங்கள் பற்றி ஆராய்ச்சி நூல் எழுதிய வெளிநாட்டவர் கிரேவ்லி.

● திருவண்ணாமலை ஆண்டார், மகாதேவர், திருவண்ணாமலை ஆழ்வார், அண்ணா நாட்டு உடையார், திருவண்ணாமலை உடையார் ஆகிய பெயர்களால் அண்ணாமலையார் குறிக்கப்படுகிறார்.

● திருவெம்பாவை பாடலை மாணிக்க வாசகர் பாடிய தலம் திருவண்ணாமலை.

● அண்ணாமலை கோயிலுக்கு 100 ஏக்கர் நிலம் தானம் அளித்தவர் தனக்கோட்டி முதலியார். தர்மகர்த்தாவாக இருந்தார்.

● தீபத்திருவிழாவில் ஏதேனும் தவறு நடந்தால் (காலம் தாழ்ந்த பூஜை), தீட்டு ஆகியவற்றுக்கு பரிகாரமாக, விழா முடிந்ததும் பிராயச்சித்த ஹோமம் நடத்துவர்.

● சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை ஆகியவை திருவண்ணாமலையில் இருந்தன.

● பெரிய சந்திரசேகரர், சின்ன சந்திரசேகரர், பக்தானுக்ரஹ சோமாஸ்கந்தர், பெரிய நாயகர், சின்ன நாயகர் ஆகிய பெயர்களில் அண்ணாமலையார் உற்சவராக பவனி வருவார்.

● திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் முதல்நாள் துர்க்கை, இரண்டாம் நாள் பிடாரியம்மன், மூன்றாம் நாள் விநாயகர் வழிபாடு நடக்கிறது.

● கார்த்திகை தீப திருவிழாவின் போது பஞ்சமூர்த்திகள் புறப்படுவர். அதற்கு முன் அர்த்தநாரீஸ்வரர் வேகமாக எழுந்தருள்வார். அவர் வந்ததும் மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.

● கார்த்திகை தீபத்திற்கு முன் அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். அண்ணாமலை தீபம் மலைக்கு புறப்படும் முன் கஜ பூஜை நடத்தப்படும். 

● மலை தீபம் ஏற்ற காண்பிக்கப்படும் தீப்பந்தத்தை எலால் என்பர். சிக்னல் போல இதை காட்டியதும், மலையில்தீபம் ஏற்றுவர். அப்போது அண்ணாமலைக்கு அரோகரா என்னும் கோஷம் எதிரொலிக்கும்.

● திருவண்ணாமலைக்கு இரு தலபுராணங்கள் கோயிலுக்கு உள்ளன. இதில் அருணகிரி புராணத்தை எழுதியவர் கண்கட்டி மறைஞானசம்பந்தர். அருணாசல புராணத்தை எழுதியவர் சைவ எல்லப்ப நாவலர்.

● சோணாசலத்திற்கு (திருவண்ணாமலைக்கு) சிறந்த க்ஷேத்திரம் இல்லை; 

சோம வாரத்திற்கு சிறந்த விரதமில்லை என்ற பழமொழி உண்டு.

● மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம் ஆகிய நாட்களில் நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக எழுந்தருள்வார். வேறு எந்த சுவாமியும் இந்த வழியாக வருவதில்லை.

● கம்பத்து இளையனார், கோபுரத்து இளையனார், பிச்சை இளையனார் என்ற மூன்று முருகன் சன்னதிகள் இங்கு உண்டு. 

● சாக முயன்ற அருணகிரிநாதரை முருகப்பெருமான் காப்பாற்றி ஆசி அளித்த கிளி கோபுரம் இங்கு உள்ளது. இத்தலத்து முருகன் மீது அருணகிரிநாதர் 79 திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.

● சம்பந்த விநாயகர் கோயிலுக்கு எதிரில் உள்ள மண்டபத்தில், மன்னர்கள் முடிசூடுவது வழக்கம். அண்ணாமலையார் சன்னதியில் முடிசூட்டும் வழக்கமில்லை.

● பச்சரிசி, வெல்லம், எள் சேர்த்த கொழுக்கட்டை, கார்த்திகை பொரி, வெல்லம் சேர்த்த பொரி உருண்டை, அவல் ஆகியவை கார்த்திகை தீபநாளில் படைக்கும் நைவேத்யம்.

● ஆறுகால பூஜையின் போது சுவாமிக்கு 16 வகை தீபம் காட்டுவர். இதில் மகாதீபம் சிவனைக் குறிக்கும். 

● புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆப் இண்டாலஜி என்ற நிறுவனம், திருவண்ணாமலை கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்து ஆங்கிலம், பிரெஞ்சு மொழியில் வெளியிட்டுள்ளது.

● அண்ணாமலை என்பதற்கு நெருங்க முடியாத மலை என பொருள். சிவன் நெருப்பு வடிவில் நின்றதால் இப்படி ஒரு பெயர் ஏற்பட்டது.

● தீப தரிசனத்திற்கு வருவோருக்கு அக்காலத்தில் சட்டிச்சோறு பிரசாதம் அளித்தனர். புளியங்கறி, மிளகு ரசம், உப்பு, நெய், தயிர், பாக்கு, வாழை இலையுடன் சோறு இடம் 

பெற்றிருக்கும்.

● இக்னீஷியஸ் ராக் என்னும் பாறை வகையைச் சேர்ந்த மலை, திருவண்ணாமலை. நெருப்பினால் உண்டான மலை என்பது இதன் பொருள்.

● அருணகிரியாரின் தாய் முத்தம்மை வழிபட்ட விநாயகர், முத்தம்மை விநாயகர் எனப்படுகிறார். தேரடிவீதிக்கும், கொசமடத் தெருவுக்கும் இடையிலுள்ள ரேடியோ கிரவுண்ட் பகுதியில் இவருக்கு கோயில் உள்ளது.

● திருமஞ்சன கோபுரத்தின் வழியாக, தினமும் அபிஷேக நீர் கொண்டு வரப்படுகிறது. இதை சுவாமி அபிஷேகத்திற்கு பயன்படுத்துவது இல்லை. நடை திறக்கும் முன், கதவின் முன்னால் தெளிக்கப்படும். 

● திருவண்ணாமலை கோயிலின் பரப்பு 10 லட்சத்து 67 ஆயிரத்து 993 சதுர அடி (24 ஏக்கர்).

● சிவனுக்குரிய 64 வடிவங்களில் ஒன்று அண்ணாமலையார். லிங்கோத்பவ மூர்த்தி என்றும் குறிப்பிடுவர். சிவன் கோயில்களில் கருவறையின் பின்புறம் இவருக்கு சன்னதி இருக்கும்.

● திருவண்ணாமலையில் அண்ணாமலையாரின் பாதம் உள்ளது. பிரதோஷ காலத்தில் நந்திக்கு அபிஷேகம் நடத்தப்படும். பிரம்மோற்ஸவத்தின் போது இவ்வூரில் நாயன்மார் பவனி வருவர். குழந்தை வரத்துக்காக பெண்கள் கரும்பு தொட்டில் வழிபாடு நடத்துவர். 

● சித்தர்கள்

திருவண்ணாமலையில் மலைவலம் வருகின்ற பாதையில், எண்ணற்ற சித்தர்களின் ஜீவசமாதிகள் அமைந்துள்ளன. 

இடைக்காடர், குகை நமச்சிவாயர், இரமண மகரிஷி ஆசிரமம், சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம், விசிறி சாமியார் ஆசிரமம், மூக்குப் பொடி சித்தர் போன்றவை உள்ளன.

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

கண்ணாரமுதக் கடலே போற்றி.

ஓம் நமச்சிவாய வாழ்க

இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் கருத்துக்களை என்ற ecoimbatore Facebook page- ல் பதிவிடுங்கள் நன்றி....


#Aanmeega seithigal  | #aanmeega thagavalkal | # temple history #Tiruvannamalai temple | #god Shiva temple | #Tiruvannamalai jothi |# Thiruvannamalai history | #ananamaiyar history

Related Videos