தமிழ் சினிமாவில் அதிசிய மனிதன்!!

கோவையில் பெரிய அரிசி வியாபாரியும் அரசியல்வாதியுமான டிஎஸ் மணியத்தின் மகனாகப் பிறந்த மணிவண்ணன், கோவையில் பிஎஸ்ஜி கல்லூரியில் படித்தார். படிக்கும்போதே அவர் பார்த்த படம் கிழக்கே போகும் ரயில். அந்தப் படம் ஏற்படுத்திய பாதிப்பில், இயக்குநர் பாரதிராஜாவுக்கு 16 பக்கங்களுக்கு ஒரு கடிதம் எழுதினாராம் மணிவண்ணன். அதைப் படித்துவிட்டுத்தான், மணிவண்ணனை தன்னுடன் சேர்த்துக் கொண்டாராம் பாரதிராஜா.

பாரதிராஜாவுக்கு மணிவண்ணன் சொன்ன முதல் கதையே பிடித்துப் போய்விட்டது. இதையே படமாக்கலாம் என முடிவெடுத்து அதற்கு நிழல்கள் என்று பெயரிட்டனர். இளையராஜா இசையில் இந்தப் படத்தில் ஒரு பாடலையும் எழுதினார் மணிவண்ணன். வாலி வருவதற்கு தாமதமானதால், மணிவண்ணனையே எழுத வைத்தாராம் ராஜா. அதுதான் 'மடை திறந்து...' பாடல். இந்தப் பாடலை எழுதி முடித்த பிறகு வாலி வந்திருக்கிறார். அதற்குள் பாதிப் பாடலை மணிவண்ணன் எழுதிவிட்டாராம். ஆனாலும் வாலி பெயரிலேயே அந்தப் பாடல் வரட்டும் என்று கூறியிருக்கிறார். 

கதை - வசனம் எழுதிய முதல் படமே தோல்வி. ஆனால் பாரதிராஜா, இதே மணிவண்ணனை வைத்து ஒரு வெற்றிப் படம் தருவேன் என்று நண்பர்களிடம் சவால்விட, அந்த சவாலில் ஜெயிக்க மணிவண்ணன் உருவாக்கிய கதைதான் அலைகள் ஓய்வதில்லை. அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதாவை கார்த்திக் வர்ணிக்கும் ஒரு காட்சியில் மணிவண்ணன் வசனங்கள் அத்தனை அழகாக அமைந்திருக்கும். காதல் ஓவியம் படத்துக்கும் மணிவண்ணன்தான் கதை வசனம். பாக்யராஜுக்குப் பிறகு, பாரதிராஜாவுக்கு பிடித்த வசனகர்த்தாவாக மணிவண்ணன் திகழ்ந்தார். 

மணிவண்ணன் இயக்கிய முதல் படம் கோபுரங்கள் சாய்வதில்லை. இந்தப் படத்துக்கு இயக்குநராக அவரை சிபாரிசு செய்தவர் இளையராஜா. கதை ரொம்பவே வித்தியாசமானது. இந்த முதல் படத்திலேயே தான் மக்களுக்காக கலைஞன் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருப்பார் மணிவண்ணன்.

மணிவண்ணனை சிகரத்தில் வைத்த படம் என்றால் அது நூறாவது நாள். மிகச் சொற்ப பட்ஜெட்டில், மிகக் குறைந்த நாட்களில்... ஜஸ்ட் 12 நாட்களில் இந்தப் படத்தை மணிவண்ணன் எடுத்திருந்தார். இதை அன்றைக்கு இளையராஜாவிடம் சொன்னபோது அவர் நம்பவே முடியவில்லையாம். 'என்னய்யா சொல்ற.. 12 நாளில் ஒரு படமா... சரி படத்தைக் காட்டு' என்றாராம். படத்தைப் பார்த்ததும், 'பிரமாதம்... அசத்தியிருக்கேய்யா... இதுக்கு நானும் ஏதாவது செய்யணுமே...' என்றவர், இதுவரை எந்தப் படத்துக்கும் போடாத அளவு மிகச் சிறப்பாக பின்னணி இசை அமைத்துக் கொடுத்தாராம். படத்தில் மூன்று பாடல்கள்தான். 'இந்தப் படத்துல அதிகமா பாட்டு வச்சா, அந்த க்ரிப் குறைஞ்சிடும். இதுவே போதும். பின்னணி இசைதான் இந்தப் படத்துக்கு ஹைலைட்டா இருக்கணும்...' என்றாராம் இளையராஜா. அந்தப் பின்னணி இசையை இசைத் தட்டிலும், கேசட்டுகளிலும் தனியாக பதிவு செய்து கொடுத்ததெல்லாம் தனிக் கதை. 

இவர் இயக்கத்தில் ஒரே நேரத்தில் வெளியான படங்கள் பாலைவன ரோஜாக்கள் மற்றும் விடிஞ்சா கல்யாணம். பாலைவன ரோஜாக்களுக்கு கலைஞர்தான் கதை வசனம். வண்ணப் பட காலகட்டத்தில் கலைஞர் கதை வசனம் எழுதி மிக அழகாகவும் சிறப்பாகவும் வந்த படங்களில் என்றும் முதலிடம் இந்த பாலைவன ரோஜாவுக்குதான். இரண்டுமே நூறு நாட்களுக்கு மேல் ஓடியவை. இரண்டிலுமே சத்யராஜ்தான் ஹீரோ. இதையெல்லாம் இன்றைக்கு யாராலாவது நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. 

மணிவண்ணன் மிகப் பெரிய வெற்றிப் படம் என்றால் அது அமைதிப்படைதான். தரம், வசூல் என அனைத்திலுமே அந்தப் படம் க்ளாஸ்-ஆக அமைந்துவிட்டது. இந்தப் படத்தை தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்தனர். அங்கும் வெற்றியைக் குவித்தது அமைதிப்படை. 

மணிவண்ணனின் 49வது படம் இது. அதன் பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், இயக்குவதிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டார். ஆனால் நடிகராக அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. 2002ல் மணிவண்ணன் இல்லாத தமிழ்ப் படமே இல்லை எனும் அளவுக்கு எல்லாப் படங்களிலும் காமெடியன், வில்லன், குணச்சித்திர வேடங்கள் என கலக்கினார். ஒரு இயக்குநராக அதிக வெற்றிப் படங்கள் தந்த பெருமை மணிவண்ணனுக்கு உண்டு. அதேபோல ராம நாராயணனுக்குப் பிறகு ஒரு ஆண்டில் அதிக படங்களை இயக்கியவரும் மணிவண்ணன்தான். மணிவண்ணன் இயக்கியுள்ள 50 படங்களில் முக்கால்வாசி இளையராஜா இசையமைத்தவைதான். இவர் படங்களில் பாடல்கள் பெரும்பாலும் சிறப்பாக இருக்கும். 

அமைதிப் படை 2-க்குப் பிறகு, தாலாட்டு மச்சி தாலாட்டு என்ற படத்தை இயக்குவதாக அறிவித்திருந்த மணிவண்ணன், அடுத்து நூறாவது நாளின் இரண்டாம் பாகம், மற்றும் சத்யராஜுன் இணைந்து பணம் படுத்தும் பாடு ஆகிய படங்களை இயக்கத் திட்டமிட்டிருந்தார். அனைத்துக்கும் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர். காரணம் அமைதிப்படை 2 கொடுத்த லாபம் அப்படி. அமைதிப்படை 2 ன் தொலைக்காட்சி உரிமையே ரூ 3.5 கோடிக்கு போனதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

அதன் பிறகு நடந்ததெல்லாம் அனைவருக்கும் தெரியும். கிட்டத்தட்ட 450 படங்களில் நடித்தார். ரஜினியுடன் தொடர்ந்து பெரிய படங்கள் பலவற்றிலும் நடித்தார். கடைசியாக சிவாஜியில் ரஜினியின் தந்தையாக நடித்தார். சினிமாவைத் தாண்டி இருவரும் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். மணிவண்ணன் மகள் திருமணத்தையே ரஜினிதான் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். 

மணிவண்ணனுக்கு நிகராக ஒரு திரைக்கலைஞர்... வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு பன்முகக் கலைஞராகத் திகழ்ந்தவர் மணி. அவரிடமிருந்து உருவான விக்ரமன், சுந்தர் சி, சீமான், பிரபு சாலமன், ராசு மதுரவன் என அத்தனை இயக்குநர்களும் வெற்றிகரமான இயக்குநர்களாகத் திகழ்கின்றனர். 

தமிழ் சினிமாவில் இயக்குநராக வேண்டுமென்றால் ஒரு முறையாவது மணிவண்ணனுடன் பணியாற்ற வேண்டும் என்பார் இயக்குநர் விக்ரமன். இனி இப்படியொரு மகத்தான மக்கள் கலைஞனுக்கு எங்கே போவது!

இரண்டாண்டுகளுக்கு முன்னர், உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்வில் இருந்தபோது, அந்தத் தகவல் வந்தது. இந்த, காமெடியா நடிப்பாரே மணிவண்ணன் அவரு இறந்துட்டாராம் என்று. பெரிய அதிர்ச்சி எனக்கு. மணிவண்ணன் இறந்ததை விட, 50 படங்கள் இயக்கிய ஓர் இயக்குநரை காமெடி நடிகர் என்ற வட்டத்தில் அடைத்து விட்டார்களே என்று. 90களுக்குப் பின் பிறந்த தலைமுறை வேண்டுமானால் அவரை காமெடி நடிகர் என்றோ அல்லது எங்கள் கிராமப்பகுதிகளில் வழங்கப்படும் “சைடு ஆக்டர்” என்ற பதம் கொண்டோ அழைத்துக் கொள்ளட்டும். ஆனால் 80களைச் சேர்ந்தவர்கள் கூட அவர் ஓர் இயக்குநர் என்பதை மறந்துவிடுகிறார்கள். 

30 வருடங்களுக்கு முன்னால், பொழுதுபோக்கிற்குத் திரைப்படங்களை மற்றுமே நம்பியிருந்த சிற்றூரில் இருந்த எனக்கு இரண்டு வகையான திரைப்படங்கள் மட்டுமே காணக்கிடைத்தன. ஒரு வகையில் பாரதிராஜா, பாலசந்தர் போன்ற இயக்குநர்களின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள். கதைக்களன் நன்கு அமைந்திருக்கும் இந்த வகைத் திரைப்படங்களில் நாயகர்களுக்கு பெரிய வேலை இருக்காது. இன்னொரு முனையில் நாயகர்களை உயர்த்திப் பிடிக்கும் மசாலா படங்கள். இந்த இரண்டும் வகையும் எனக்குப் பிடித்தமில்லை. கலைப் படங்களுக்கும் வணிகப் படங்களுக்கும் இடையில் பேரலல் சினிமா என்று ஒன்று இருப்பதுபோல, வணிகப் படங்களிலேயே கதையை அடிப்படையாக கொண்ட படமே அந்த வயதில் எனக்கு தேவைப்பட்டது.

அப்பொழுது பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். பள்ளிக்குச்செல்லும் வழியில் ஒட்டப்பட்டிருந்த ஒரு திரைப்படச் சுவரொட்டி கவனத்தை ஈர்த்தது. பாக்யராஜும் தாடி வைத்த ஒருவரும் கம்புகளை வைத்து சண்டைப் போட்டுக் கொண்டிருப்பது போலவும், அதை பாரதிராஜா பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவும் அடியில் சிறந்த சிஷ்யன் யார் என்ற போட்டிக்கே சண்டை என்பதைப் போலவும் ஒரு வாசகம் இடம் பெற்றிருந்தது. அது மணிவண்ணன் இயக்கிய முதல் படமான “கோபுரங்கள் சாய்வதில்லை”க்கான விளம்பரம். எங்கள் ஊருக்கு, வெளியாகி 100 நாட்கள் கழித்தே எந்தப் படமும் வரும். இந்தப் போஸ்டர் 100 நாட்கள் ஓடியபின் அடிக்கப்பட்ட போஸ்டர் என்பதாலும் அப்போது எந்தச் சமூக வலைத்தளமும் இல்லாததாலும் யாரும் அதைக் கிண்டல் செய்யவில்லை. அந்த போஸ்டருக்கான நியாயத்தைச் சிறப்பாகவே செய்தவர் மணிவண்ணன். ஆனாலும் படம் பார்க்கும் ஆவல் வரவில்லை. அதன்பின் அவர் இயக்கி வெள்ளி விழா கண்ட “இளமைக் காலங்கள்” படத்தையும் பார்க்கவில்லை.

சத்யராஜுக்கு அடையாளம் கொடுத்த நூறாவது நாள் திரைப்படம் வந்தபோது, இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகள் பரபரப்பாகப் பேசப்பட்டன‌. சில தியேட்டர்களில் பெண்கள் மயங்கி விழுந்தார்கள், எனவே இடைவேளை முடிந்து படம் ஆரம்பித்து சிறிது நேரம் கழித்து ஒரு சோடாவை உடைத்து ரெடியாக வைத்துக் கொள்வார்கள் என்றெல்லாம் செய்தி பரவியது. படம் பிடித்திருந்தது. தொடர்ந்து வந்த 24 மணி நேரமும் ஓக்கே ரகம். அதன்பின் மணிவண்ணன் படங்கள் என்றாலே ஒரு ஆவல் பிறந்தது.

பாரதிராஜாவின் படத்தைப் புகழ்ந்து கடிதம் எழுதி, அவரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தவர் மணிவண்ணன். ஐந்து பெரிய வெற்றிப்படங்களுக்குப் பின் நிழல்கள் படத்தில் தான் தன் முதல் தோல்வியைச் சந்தித்தார் பாரதிராஜா. அது மணிவண்ணனின் கதை. இருந்தும் தன் அடுத்த படத்திற்கு மணிவண்ணன் சொன்ன கதையையே எடுத்தாண்டார். அதுதான் பெரிய வெற்றி அடைந்த அலைகள் ஓய்வதில்லை. காதல் ஓவியம் வரை பாரதிராஜாவிடம் பணியாற்றினார். அதன்பின்னர் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தை இயக்கினார்.

மணிவண்ணனின் சிறப்பே எல்லா வகையான கதைக் களங்களையும் கையாண்டு எல்லாவற்றிலும் வெற்றியைக் கண்டவர் என்பதுதான். காதல் என்றால் இளமைக் காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை. குடும்பக் கதைகள் எனில் கோபுரங்கள் சாய்வதில்லை, அம்பிகை நேரில் வந்தாள். திரில்லர் என்றால் நூறாவது நாள், 24 மணி நேரம், விடிஞ்சா கல்யாணம், மூன்றாவது கண். சமூக சீர்திருத்தம் என்றால் முதல் வசந்தம், வாழ்க்கைச் சக்கரம். ஜனரஞ்சகமான படங்கள் எனில் ஜல்லிக்கட்டு, சின்ன தம்பி பெரிய தம்பி, சந்தனக்காற்று. அவர் எக்காலத்திலும் நினைவு கொள்ளப்படும் அரசியல் விமர்சனப் படங்கள் எனில் பாலைவன ரோஜாக்கள், இனி ஒரு சுதந்திரம், அமைதிப்படை. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தியிலும் படங்களை இயக்கியவர் மணிவண்ணன்.

மணிவண்ணன் இயக்கிய படங்களில் தொழில் நுட்பம் ஆச்சர்யமூட்டுவதாக இருக்காது. நடனம், சண்டைக் காட்சிகள் மனதை கவராது. அவருடைய பலமே சுவராசியமான கதை. நல்ல கதாசிரியர்களை அவர் தனது படங்களில் தொடர்ந்து உபயோகித்துக் கொண்டார். கோபுரங்கள் சாய்வதில்லை, முதல் வசந்தம், இங்கேயும் ஒரு கங்கை படங்களில் கலைமணி, சின்ன தம்பி பெரிய தம்பி, உள்ளத்தில் நல்ல உள்ளம் படங்களில் ஷண்முக பிரியன், ஜல்லிக்கட்டு படத்தில் வியட்நாம் வீடு சுந்தரம் எனத் தேர்ந்த கதாசிரியர்களின் துணையோடு இயக்கினார். 

அந்தக் கதைக்கு ஏற்றார் போல அன்றாட வாழ்வில் இருந்து எடுக்கப்படும் கேரக்டர்கள், அந்தக் கேரக்டர்கள் பேசும் சமூகத்தைக் கேள்வி கேட்கும் வசனங்கள் தான் மணிவண்ணனின் சிறப்பு. அந்த கேரக்டர்களும் மணிவண்ணனின் குரலாகவே ஒலிக்கும். மணிவண்ணனின் இன்னொரு பிளஸ் பாயிண்ட் நகைச்சுவை. அவரின் முதல் படமான கோபுரங்கள் சாய்வதில்லை தொடங்கி கடைசிப்படமான நாகராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ வரை மீண்டும் மீண்டும் ரசிக்கும்படியான நகைச்சுவை அமைந்திருந்தது (சில த்ரில்லர் படங்களைத் தவிர).

கவுண்டமணியுடன் இணைந்து அவர் பணியாற்றிய வாழ்க்கைச் சக்கரம், புது மனிதன், தெற்கு தெரு மச்சான் ஆகிய படங்களில் சிறப்பான நகைச்சுவை காட்சிகள் அமைந்திருக்கும்.

மணிவண்ணின் இயக்கிய சமூகக் கருத்துள்ள படங்களில் முக்கியமானது முதல் வசந்தம். அதுவரை வந்த படங்களில் பெரும்பாலும் பிராமணர், முதலியார், செட்டியார் போன்ற எளிதில் தெருவில் இறங்கி சண்டைக்கு வந்துவிடாத வகுப்பினரே தங்களை விட ஜாதி அடுக்கில் குறைவானவர்களுடன் ஏற்படும் காதலை எதிர்ப்பதாகக் காட்சிப்படுத்துவார்கள். சில திரைப்படங்களில் தேவர் சமூகத்தினரை காட்சிப்படுத்தி இருப்பர். மிக அரிதாக ”மனிதரில் இத்தனை நிறங்களா” என்ற படத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உள்ளேயே அடுக்குகளில் இருக்கும் தீண்டாமையைக் காட்டி இருப்பார்கள். கவுண்டர் சமூகத்தினரின் தீண்டாமையை நேரடியாக பெயர்களுடன் பதிவு செய்தது ”முதல் வசந்தம்” படம்தான். வேட்டைக்காரக் கவுண்டர் (மலேசியா வாசுதேவன்), குங்குமப் பொட்டுக் கவுண்டர் (சத்யராஜ்) என நேரடியான பெயர்களுடன் குறிப்பிடப்பட்டிருக்கும். இருவரும் எதிரிகள். இருந்தாலும் வேட்டைக்காரக் கவுண்டர், தன் வேலையாட்கள் குங்குமப் பொட்டுக் கவுண்டரைத் திட்டுவதை பொறுத்துக் கொள்ளாத அளவுக்கு ஜாதிப்பாசம் கொண்டவர். தன் மகள் தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரனைக் காதலிக்கிறார் என்று தெரிந்ததும் எதிரியான குங்குமப் பொட்டுக் கவுண்டருக்கே மணமுடிக்கத் திட்டமிடுவார்.

வாழ்க்கைச் சக்கரம் படத்தில் வரதட்சணைப் பிரச்சினையை தொட்டு இருப்பார். இப்பொழுது வரதட்சணைப் பிரச்சினை என்பது குறைந்து விட்டது. பெண் கிடைத்தால் போதும் எனப் பலரும் சொல்ல கேட்க நேரிடுகிறது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் அந்தப் பிரச்சினை வெகுவாக இருந்தது. மற்ற இயக்குநர்கள் எல்லாம் வரதட்சணைப் பிரச்சினையை மார்க்கெட் இழந்த நடிகர்களை வைத்து, நாடகப் பாணியில் எடுப்பார்கள். ஆனால் மணிவண்ணன் ஆக்சன் ஹீரோவாக அப்போது இருந்த சத்யராஜை வைத்து இந்தப் படத்தை எடுத்து, மக்களிடம் கொண்டு சேர்த்தார். வீட்டில் காசு இல்ல, ஆனாலும் கவுரவத்துக்காகக் கடன் வாங்கி பெட்ரோல் போட்டு லயன்ஸ் கிளப் போறேன் என்று வாழ்ந்து கெட்டவர்களைக் காட்சிப்படுத்தி இருப்பார்.

மணிவண்ணன் ஒரு தீவிர வாசிப்பாளர். பொது உடைமை தத்துவங்களிலும், பெரியாரின் கருத்தியலிலும் ஆழ்ந்த பற்றுள்ளவர். இது அவரது அரசியல் படங்களில் வெளிப்படும். பாலைவன ரோஜாக்களில் சத்யராஜ் நேர்மையான, அரசியல் தவறுகளை எதிர்க்கும் பத்திரிக்கை ஆசிரியர், லட்சுமி மாவட்ட ஆட்சியர். வசனம் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த கருணாநிதி. 80களில் வெளிவந்த அரிதான அரசியல் படங்களில் இந்தப்படமும் ஒன்று. அடுத்த ஆண்டில் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகியின் அவலத்தைச் சொல்லிய “இனி ஒரு சுதந்திரம்”. இப்படம் கோமல் சுவாமிநாதனின் நாடகம் ஒன்றை தழுவியது. 94ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கிய “அமைதிப்படை”. தமிழ் சினிமாவில் அரசியல் பேசிய மிகச்சிறந்த படங்களில் ஒன்று. படம் வெளியாகி 20 ஆண்டுகள் கழிந்த பின்னும் இக்காலச் சூழ்நிலைக்கு பொருந்தும்படி இருக்கிறது இந்தப்படம். மணிவண்ணன் இயக்கிய தோழர் பாண்டியன், வீரப்பதக்கம் ஆகிய படங்களிலும் பொது உடைமை மற்றும் சுயமரியாதைக் கருத்துகள் இடம்பெற்று இருந்தன.

மணிவண்ணன் இயக்கிய ஜல்லிக்கட்டு (சிவாஜி, சத்யராஜ்), சின்ன தம்பி பெரிய தம்பி (பிரபு, சத்யராஜ்), சந்தனக்காற்று (விஜயகாந்த்) ஆகிய படங்கள் நல்ல வசூலைத் தந்த படங்கள். சத்யராஜை வைத்து அவர் தொடர்ந்து இயக்கிய புது மனிதன், தெற்கு தெரு மச்சான் ஆகியவையும் முதலுக்கு மோசமில்லாத படங்கள். கனம் கோர்ட்டார் அவர்களே என்னும் படம் மட்டும்தான் வர்த்தக ரீதியாக அந்நாட்களில் தோல்வி அடைந்தது. இந்தப் படங்களிலும் மணிவண்ணன் தன்னுடைய அரசியல் கருத்துக்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல சொல்லிவந்தார். தெற்கு தெரு மச்சான் படத்தில் காவிரி நீர்ப் பிரச்சினையை லேசாகத் தொட்டுக் காட்டி இருப்பார்.

விஜயகாந்த், மோகன், சத்யராஜ், பிரபு ஆகியோர் மணிவண்ணனின் படங்களில் தொடர்ந்து நடித்தவர்கள். சிவகுமார், சந்திரசேகர் ஆகியோரும் தவறாமல் மணிவண்ணன் படங்களில் இடம் பிடிப்பார்கள். சிவாஜி கணேசனையும் இயக்கிய மணிவண்ணன் ஏனோ கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் கார்த்திக்குடன் இணைந்து பணியாற்றவில்லை. இத்தனைக்கும் ரஜினிகாந்துடன் கொடி பறக்குதுவில் வில்லனாகவும் நடித்து நல்ல அறிமுகமும் கொண்டவர். மணிவண்ணன், ஹீரோக்களை நம்பி படம் எடுத்தவர் அல்ல. அவர் ஸ்கிரிப்டை நம்பி படம் எடுத்தவர். அதனால்தான், தான் எடுக்கப்போகும் கதைக்குத் தோதான நடிகர்களையே உபயோகப்படுத்தினார். அதனால்தான் அவர் உருவாக்கிய அருக்காணி, அமாவாசை, ஆபாயில் ஆறுமுகம், வேட்டைக்காரக் கவுண்டர், குங்குமப் பொட்டுக் கவுண்டர் எல்லாம் அனைவர் நினைவிலும் நிற்கிறார்கள்.

மணிவண்ணனிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்களும் சோடை போனவர்கள் அல்ல. திரைப்படக் கல்லூரியில் படித்துவிட்டு வந்த ஆர்கே செல்வமணி, விக்ரமன், வைகாசி பொறந்தச்சு ராதா பாரதி, சுந்தர் சி, செல்வ பாரதி, சீமான், ஈ ராமதாஸ், மாயாண்டி குடும்பத்தார் ராசுமதுரவன் என குறிப்பிடத்தக்க இயக்குநர்கள் மணிவண்ணனின் பிரதான உதவியாளர்களாக இருந்தவர்கள். மணிவண்ணன் படங்கள் எப்படி வெரைட்டியாக இருக்குமோ அப்படித்தான் அவர் உதவியாளர்களும். பீல்குட் குடும்பப் படங்கள் எனில் விக்ரமன், அரசியல் பின்புலம் எனில் செல்வமணி, சீமான், ஈ ராம்தாஸ், டப்பிங் படங்கள் எனில் செல்வபாரதி, கிராமத்து குடும்பத்துக் கதைகள் எனில் ராசுமதுரவன், சுந்தர் சியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

மணிவண்ணன் 1994 வரை பிஸியான இயக்குநராகவே இருந்தார். அந்த ஆண்டிலேயே அவருடைய நான்கு படங்கள் வெளிவந்தன. பின் 1995ல் கங்கைக்கரைப் பாட்டு படத்தை இயக்கிய பின்னர், உடல்நிலை பாதிப்பின் காரணமாக தற்காலிகமாகப் படங்களை இயக்குவதை நிறுத்திக் கொண்டார்.

மணிவண்ணன் ஈழ போராட்டத்தின் மீதும், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதும் ஈடுபாடு கொண்டிருந்தார். அதனால்தான், வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்த போது அதில் இணைந்தார். மதிமுக, 1998ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக உடன் கூட்டணி வைத்த உடன் சற்று மனம் தளர்ந்தார். 2007க்குப் பின் தமிழ்நாட்டில் ஈழ போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல்கள் எழுந்தது. பாரதிராஜா, சீமான், அமீர் ஆகியோர் சில போராட்டங்களை நடத்தினார்கள். இவர்களுக்கு மணிவண்ணன் தார்மீக ஆதரவை அளித்தார்.

பிரசாந்த், ஜெயா ரே, மும்தாஜ் நடித்த சாக்லேட் படம் வெற்றிபெற்ற பின்னர் ஜெயா ரேவுக்கு வாய்ப்பே வரவில்லை. மலை மலை பாட்டுல எல்லா கல்லையும் மும்தாஜே எடுத்துட்டுப் போயிட்டாங்க, எனக்கு கூழாங்கல் கூட கிடைக்கல என்று அவர் நிருபர்களிடம் வருத்தப்பட்டாராம். அதுபோல இந்தப் போராட்டங்களில் புகழ் பெரும்பாலும் சீமானுக்கே சேர்ந்தது. இதில் பாரதிராஜா சற்று மனவருத்தம் கொண்டு விலகிக்கொண்டார். ஆனால் மணிவண்ணன், சீமான் அணியினருடனே இருந்தார். இதன் காரணமாக பாரதிராஜாவுக்கும், மணிவண்ணனுக்கும் இடையே சற்று மனவிலக்கம் ஏற்பட்டது.

பிஸியான இயக்குநராக இருந்து, குணச்சித்திர, நகைச்சுவை நடிகராக மாறிய மணிவண்ணன் அதிலும் தன் முத்திரையைப் பதித்தார். முதலில் கூறியதைப் போல 90களில் பிறந்தவர்களுக்கு அவரை ஓர் இயக்குநராக தெரிவதை விட நடிகராகத்தான் தெரியும். தான் நம்பிய அரசியலுக்கு மாறாக நிஜ வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் சரி நடக்காத மணிவண்ணன் ஒரு சமூகப் போராளிக்கு உரிய மரியாதையோடு வழியனுப்பப்பட்டார்

.மணிவண்ணன் - தமிழ் சமூகத்தின் தவிர்க்க முடியாத கலைஞன் 

பாரதி தமிழ் மொழி பகுத்தறிவு 

மணிவண்ணன் என்கிற மகத்தான கலைஞனை மனிதனை இழந்து தவித்து கொண்டிருக்கிறோம். அவருடைய இறப்பு அறிவிற்குப் புலப்பட்டாலும் மனதால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. தமிழகம் முழுவதும் வாழும் பகுத்தறிவாதிகள் அனைவராலும் நமது தோழர் என்று உணரப்பட்ட அற்புதமான மனிதர். பார்ப்பன நடுத்தர வர்க்க பார்வையாளர்களை மய்யப்படுத்திய திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்த 80களில் வேலையில்லாத் திண்டாட்டம், தொழிலாளர் பிரச்சனைகளை மய்யப்படுத்திய திரைப்படங்கள் வெளிவர காரணமாக இருந்தவர். இனி ஒரு சுதந்திரம், வீரப்பதக்கம், தோழர் பாண்டியன், அமைதிப்படை போன்ற திரைப்படங்களில் மணிவண்ணனின் வசனங்கள் சமகால அரசியலை மிகத் துணிச்சலாக சாடியவை.

என்று நினைவு.. மதுரை தமுக்கம் மைதானத்தில் தமுஎச சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை இரவில் மணிவண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். உள்ளத்தை அள்ளித் தா, அவ்வை சண்முகி என மணி்வண்ணன் இயக்குனர் பணியில் இருந்து தற்காலிகமாக விடுபட்டு முழு நேர நடிகனாக தன்னை வடிவமைத்து கொண்டிருந்த நேரம். அவருக்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து உருவாகி இருந்த நேரம். அந்த மாநாட்டில் இடது சாரித் தோழர்கள் தவிர்த்து வெகுசன மக்கள் பலரும் மணிவண்ணனை பார்ப்பதற்காக கூடி இருந்தனர். அந்த பெருந்திரள் கூட்டத்திற்கு முன் மிகவும் பணிவாகப் பேசிய அவரது உரையின் பாதிப்பு பத்து நாட்களுக்கு மேல் என்னிடம் இருந்தது. கடந்த ஒராண்டிற்கு முன் மூவர் தூக்கிற்கு எதிரான உண்ணாநிலை மேடைக்கு மணிவண்ணனை அழைப்பதற்காக அவருடைய வீட்டிற்கு நானும் அமீர் அப்பாஸூம் சென்றிருந்தோம். அப்போதும் மிகவும் தன்மையுடன் பேசினார். அவருடைய மகன் வயதில் உள்ள என்னை அவரது சம வயது தோழர் போல் நடத்திய அவரது பண்பு இன்றைய அரசியல்வாதிகள் , பிரபலங்கள் எத்தனை பேருக்கு வரும்? 

அய்ம்பது திரைப்படங்களை இயக்கிய, 400 படங்களில் நடித்த 30 ஆண்டு காலமாக பொதுவுடைமை அரசியலுடனும் திராவிட இயக்க ஆளுமைகளுடனும் தொடர்பு வைத்திருந்த மனிதரின் எளிமை என்னை ஆச்சரியப்படுத்தியது. இனி இது போல் என்னை ஆச்சரியப்படுத்தும் அற்புதமான மனிதர்களை என் வாழ்நாளில் சந்திக்க வாய்ப்பிருக்கிறதா என்கிற கேள்வி என்னுள் எழுகிறது. அந்த மதுரை கலை இரவில் திரையில் தோன்றும் நடிகர்களை நேரில் பார்ப்பதையே அதிசயமாக நினைக்கும் மனநிலைதான் என்னிடம் இருந்தது. அப்போது எனக்கு வயது 12. ஆனால் சமீபத்தில் அவரை சந்தித்த போதும் அதே பிம்பம்தான் எனக்கு இருந்தது. சினிமா குறித்தும் நடிகர்கள் குறித்தும் எனக்கிருந்த மாய பிம்பம் உடைந்திருந்த இந்த காலகட்டத்திலும் அவர் என்னை முழுமையாக வசியபடுத்தி இருந்தார் என்பது நான் மறுக்கமுடியாத உண்மை. ஏனென்றால் இயக்குனர், நடிகர் என்கிற நிலையைத் தாண்டி அற்பதமான மனிதராக அவர் இருந்தார் என்பதை நான் உணர்ந்து கொண்ட அனுபவம். 

அமைதிப்படை திரைப்படம் வந்த புதிதில்தான் மணிவண்ணனைப் பற்றிய பிம்பத்தை எனக்கு என் அப்பா (ஏபி.வள்ளிநாயகம்) கொடுத்தார். மதுரை மதி திரைஅரங்கில் ஒரு இரவுக் காட்சி அந்த திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்தோம். சத்யராஜ் அந்த படத்தில் பெரியாரின் வசனத்தை பேசுவார். அந்த வயதில் அந்தக் காட்சி ஒன்று மட்டுமே எனக்குப் புரிந்தது. மிகவும் பிற்காலத்தில் அந்த படத்தை பார்க்கும் போதுதான் தீண்டாமை கொடுமை, நாத்திக பிரச்சாரம், அரசியல் நையாண்டி என பல்வேறு கருத்துக்கள் அந்த படத்தில் இருப்பது புரிந்தது. இப்பேர்பட்ட கலைஞனுக்கான அங்கீகாரத்தை திரையுலகம் கொடுக்கவில்லை என்பதே என்னுடைய ஆதங்கம். 

பாரதிராசா போன்ற பழுத்த அனுபவம் வாய்ந்த இயக்குனர் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் வார இதழில் மணிவண்ணன் குறித்து பேசியது மிகவும் வேதனை அளிக்கக் கூடியது. முதல் மரியாதை, வேதம் புதிது எடுத்த பாரதிராசாவா இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார் என்பது நெஞ்சைப் பிளக்கும் கேள்வியாக இருக்கிறது. பாரதிராசாவே உங்க படத்தை பார்த்துட்டு நாங்க கரையேறிட்டோம் நீங்க கரையேறலையா? அலைகள் ஓய்வதில்லை, காதல் ஒய்வதில்லை, வேதம் புதிது, கருத்தம்மா என உங்களின் பல படங்கள் உடைமை சமூகத்தையும் சாதிய சமூகத்தையும் கேள்விக்குட்படுத்திய காவியங்கள்தான். அதற்காக தமிழ் திரைச் சூழலில் உங்களுக்கு ஒப்பற்ற இடத்தை மணிவண்ணன் போன்ற இயக்குனர்கள் கொடுத்து வைத்திருந்தார்களே, அதற்கு நீங்கள் கொடுத்த பரிசு இதுதானா? 

மணிவண்ணன் என்கிற மனிதன் வறுமையில் பிறந்திருக்கலாம்; வலியுடன் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அதற்காக மணிவண்ணன் வருத்தப்பட்டிருக்க மாட்டார். ஆனால் தன் வாழ்நாளில் கடைசி தருணங்களில் ஏற்பட்ட மன வலியை அவரால் தாங்கியிருக்க முடியாது. பாரதிராசாவே கடுமையான வார்த்தைகளில் பேசியிருந்தாலும் பத்திரிக்கை தர்மத்தை கருத்தில் கொண்டு விகடன் பத்திரிக்கை அந்த வார்த்தைகளை தணிக்கை செய்திருக்கலாம். 

மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் வரும் இயல்பான தந்தை போலவே நிஜ வாழ்க்கையிலும் அற்புதமான மனிதராகவே மணிவண்ணன் வாழ்ந்திருக்கிறார். பணம் இல்லாதபோது கம்யூனிசமும் சாதி ஒழிப்பு சிந்தனையுடன் படம் எடுத்த பல பேர் இன்று உடைமை சமூக உணர்வுடனும் சாதி உணர்வுடனும் இருப்பதை நாம் கண்கூடாய் காண்கிறோம். இது போன்ற சந்தர்பவாத சமூகத்தில் இறுதி வரை தான் கொண்ட கொள்கைகளே தனக்கான அடையாளம் என்று வாழ்ந்த அற்புதமான மனிதர் மணிவண்ணன். அந்த படைப்பாளியின் கொங்கு நாட்டு கிண்டலை நம்மால் மீண்டும் கேட்கமுடியுமா? ஈழப்பிரச்சனைக்கும் பெரியாரிய மேடைகளுக்கும் வலிய வந்து உதவி செய்யும் கொள்கையாளரை மீண்டும் சந்திக்க முடியுமா என்கிற கேள்விகள் எழும் போதே இந்த இழப்பின் வலியை நம்மால் உணர முடிகிறது.

கார்ப்பரேட் கலாச்சரத்தை மய்யப்படுத்திய மேட்டுக் குடி பாணி இயக்குனர்கள் மய்யம் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் காரல் மார்க்ஸின், பெரியாரின் கருத்துக்களை திரைஅரங்குகளில் பேச வைத்த எளியவர்களின் இயக்குனரை, அரசியல் விமர்சகரை நாம் இனி எங்கு காணப் போகிறோம்? பகுத்தறிவுவாதியாக மணிவண்ணனுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். ஆனால் பாமர ரசிகனாக என்னால் எதுவும் பேச முடியவில்லை. 

.அமை திபடையில் ஒரு வசனம் ;சத்தியரஜ் சொல்லுவார்;ஏன்டா மனியா சாமி இருக்குன்னு சொல்ரவந்தான கோயில இடிச்சான்,இல்லன்னு சொல்ரவனா கோயில இடிச்சான்.  

மிக அற்புதமான இயக்குனர்! நடிகர்!! மனிதர்!!!

Related Videos