விகடகவி தெனாலி ராமனின் வேடிக்கையான கதை!!!

ஒருநாள், அரசவையில், மன்னர் கிருஷ்ணதேவராயர் பிறந்த நாள் விழா, ஆடம்பரமாக நடந்து கொண்டிருந்தது. அமைச்சர்கள், வணிகர்கள்,பொதுமக்கள் எல்லோரும் அவரவர் நிலைக்கேற்ப பரிசுகளை மன்னரிடம் சமர்ப்பித்து பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில், தெனாலிராமரும் இருந்தான். அவர் மன்னரிடம் சென்று, கொண்டு வந்திருந்த மிகப்பெரிய பரிசுப்பொட்டலத்தை சமர்ப்பித்தபோது, மன்னரும் எல்லோரையும் போல அதில் என்ன இருக்கிறது என்றறிய ஆவல் கொண்டு, தெனாலிராமரிடம், பொட்டலத்தை பிரிக்கச் சொல்ல, அவரும் பிரித்தார்.

மேலே உள்ள தாள்களையும், இலைகளையும் பிரிக்கப்பிரிக்க உள்ளே வெவ்வேறு வடிவங்களில் சிறுசிறு பொட்டலங்கள் வந்துகொண்டே இருந்தன, அவையோர் எல்லாம் மன்னர் உட்பட, அப்படி என்ன பரிசு அதனுள் இருக்கிறது என்று அறிய ஆவல் கொண்டு அவர் பிரிப்பதையே, ஆர்வத்துடன் உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். கடைசியில் ஒரு சிறிய பெட்டியை தெனாலிராமன் பிரிக்க அதனுள் இருந்து நன்கு பழுத்த ஒரு சிறு புளியம்பழம். எல்லோரும் ஏளனமாகச் சிரித்தனர். அடச்சே, இதற்குதான் இத்தனை ஆர்ப்பாட்டமா எனச் சிலரும், எத்தனை தைரியம் இருந்தால் மன்னரின் பிறந்த நாளில் அவரை ஏளனப்படுத்துவது போல, புளியம்பழம் கொடுத்திருப்பான, மன்னர் என்ன தண்டனை விதிக்கப்போகிறாரோ என எல்லோரும் பதைபதைப்புடன் மன்னரைப் பார்த்தனர். மன்னர் அமைதியாக " தெனாலி! எதற்காக இந்தப் புளியம்பழம்" என்று கேட்க, தெனாலிராமன் அமைதியாக " மன்னா, நாடாளும் அரசர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவது இந்தப் புளியம்பழம் ஒன்றுதான், எனவே தான் தங்களுக்கு இதனை பரிசளித்தேன்" என்றான். " அப்படி என்ன தத்துவம், இந்தப் புளியம்பழத்தினுள்" என அரசர் கேட்டார்.

"மன்னா!! மன்னர் என்பவர், உலகம் என்னும் புளியமரத்தில் காய்க்கும் புளியம்பழத்தைப்போல இனிமையானவராக இருக்கவேண்டும், அதேநேரம், ஆசாபாசங்கள் எனும் பந்தத்தில் ஒட்டாமல், புளியம்பழம் ஓட்டினுள் ஒட்டாமல் இருப்பதுபோல இருங்கள் என உணர்த்தவே, புளியம்பழம் பரிசளித்தேன்" என்றான். அவையோர், தெனாலியின் சமயோசிதபுத்தியை எண்ணி ஆரவாரத்துடன் கைதட்டினர். மன்னர் கண்கள் கலங்க சிம்மாசனத்தை விட்டு இறங்கி, தெனாலியை ஆரத்தழுவி "என் கண்களைத் திறந்துவிட்டாய்.. மன்னனுக்கு எதற்கு இத்தனை ஆடம்பரமான பிறந்தநாள் கொண்டாட்டங்கள், அனைத்தையும் உடனே நிறுத்துங்கள், அரச சொத்தையும், மக்களின் வரிப்பணத்தையும் வீண் செலவு செய்துவிட்டேனே, இனி பிறந்தநாளில் திருக்கோவில்களில் அர்ச்சனைமட்டும் செய்யுங்கள் போதும் என உத்தரவிட்டார். அவையோர் அனைவரும், தெனாலியின் தைரியத்தையும், புத்தி சாதுரியத்தையும் வியந்து பாராட்டினர். தெனாலிராமனின் வாக்கு சாதுர்யத்தினால், வெளியூர் தத்துவஞானியை தெறித்து ஓடச்செய்த கதையை இனி காணலாமா!

Related Videos