உட்கார்ந்து சாப்பிட எண்ணி சோம்பேறி சீடர்கள் போட்ட திருட்டு !
உழைக்காமல் திருடி சம்பாதிக்க துணிச்சல் இன்றி, குரங்கைப் பழக்கி திருட்டுத் தொழில் செய்ய முடிவெடுத்தனர் முட்டாள் குருவும் அடிமுட்டாள் சீடர்களும். ஏதேச்சையாக காட்டில் கண்ட குரங்கைப்பிடித்து ஆசிரமத்தில் வைத்து "குருநாதர் அடிக்கடி சுருட்டு பிடிக்கிறார்.நமக்கு ஒரு தடவைகூட தந்ததில்லை.. குரங்கே!எங்களுக்கு நல்ல விலைஉயர்ந்த சுருட்டை கொண்டுவா " என அனுப்ப, குரங்கு பட்டாசுக்கடையில் கண்ட பட்டாசுகளை சுருட்டென தவறாக எண்ணிக் கொண்டுவந்துவிட்டது.
ஆனந்தம்கொண்ட அடிமுட்டாள்சீடர்கள் எல்லாம், ஆஹா! நம் குருநாதர் பிடிப்பதைவிட விலை உயர்ந்த சுருட்டுகள்.. அதுதான் கலர் கலராக இருக்கிறது, அட பத்த வைக்க திரி கூட இருக்கிறதே, எனப் பத்த வைக்க, பட்டாசு வெடித்தது. உதடுகள் கிழிந்து, "ஆஆ ஆஞ்சநேயா" என வலியில் கதற, குரு ஒடிவந்து, எனக்குத் தெரியாமல் இனி "திருட்டுத்தனம்" கூடாது என சீடர்களுக்கு வார்னிங் செய்தார். தங்கள் குருநாதர் கிழிந்த வேட்டி உடுத்தி இருப்பது கண்டு, "குருவே! உங்களுக்கு நல்ல பட்டுத்துணிகள் எடுத்துவரச்சொல்லுங்கள்" என்றனர்.
அவ்வாறே, குரங்கும் அரண்மனையில் இருந்த மன்னனின் ஆடைகள், கிரீடம் யாவற்றையும் கொண்டுவந்துவிட, அதைக் கண்ட முட்டாள் சீடர்கள் எல்லாம் வாய்பிளந்து ஆளுக்கொரு ஆடைகள் உடுத்திக்கொள்ள, உற்சாகமாக, கிரீடம் சூடிய முட்டாள் குருவுடன் ஊர்வலமாக ஊருக்குள் சென்றனர். அடுத்த நொடியே, அரசனிடம் திருடியதற்காக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். உட்கார்ந்து சாப்பிட ஒரு வழியும் இல்லையா... என்ன நாடு இது? கொடுமை சார்" என முட்டாள்குருவுடன் புலம்பியபடியே இருந்தனர் அடிமுட்டாள் சீடர்கள்.