ஐந்து சீடர்களின் அற்புதத் தயாரிப்பு "தொப்பை கரைச்சான் லேகியம்"!!
ஒருமுறை, திடீரென பரமார்த்த குருவின் தொப்பை பெரிதாகிப்போனது, உட்கார நடக்க முடியாமல் சிரமப்பட்டார். இதனால் கவலையடைந்த ஒருசீடன், "குருவே, உங்கள் தொப்பை தினமும் வளர்வது கவலையளிக்கிறது" என்று கூற, மற்றொரு சீடன் " குருவே! உங்களுக்குக் குழந்தை பிறக்கப்போவது போல வயிறு பெரிதாகிறது " எனக்கூற, இன்னொருவன் " உங்கள் வயிறு ஒருநாள் வெடித்துவிடப்போகிறது" என்றான். குரு பயந்து" என்ன செய்யலாம்?" எனக்கேட்க," வைத்தியரிடம் சென்றால்.. சரிசெய்யலாம்" என்றான் ஒருவன். வேறொருவன் " வேண்டாம்,
நம்மிடம் உள்ள ஓலைச்சுவடிகளில், "தொப்பைக் கரிச்சான் லேகியம்" சாப்பிட்டால் தொப்பை கரைந்துவிடும் என இருக்கு, தேவையான மூலிகைகளை நாங்கள் காட்டில் பறித்து வருகிறோம் என்றனர். குரு சீடர்களின் புத்திசாலித்தனத்தை வியந்து, சீக்கிரம் கொண்டுவாருங்கள், நாம் அதை மற்றவர்களுக்கும் விற்று நிறைய சம்பாதிக்கலாம் எனக்கூறினார். சீடர்கள் காட்டில் தொப்பை கரிச்சான் மூலிகை எது எனத்தெரியாமல் விழித்தபடி நிற்கும் வேளையில் ஒட்டிய வயிற்றுடன் முனிவர் ஒருவர் தவம் செய்வதுகண்டு, முனிவரே, தொப்பை கரிச்சான் செடி எங்கே இருக்கிறது என்று கேட்டு அவர் தவம் கலைக்க, கோபங்கொண்ட முனிவர் அவர்களை குழப்ப எண்ணி, எது நாறுகிறதோ அதுவே நீ தேடுவது" என்றார்.
இதை நம்பிய முட்டாள்சீடர்கள், கண்களில்கண்ட எல்லாச்செடி இலைகளையும் பறித்தனர். அவற்றைக் கண்ட குரு மகிழ்ந்து என் தொப்பை சீக்கிரம் குறைந்து விடும் என்று அவர்கள் அரைத்துக்காய்ச்சிய கெட்டநாற்றம் வீசிய லேகியத்தை மூக்கைப்பிடித்துகொண்டே பல உருண்டைகள் உண்டார். மன்னன் முதல் மக்கள் வரை தொப்பை கரைக்க பரமார்த்தர் லேகியம் உண்பது அறிந்து அவர்களும் தொப்பை கரைக்க மூக்கைப் பிடித்துக்கொண்டே, உண்டனர். சிறிதுநேரத்தில் எல்லோருக்கும் கடும் வயிற்றுவலியுடன், கண்டவற்றை உண்டதால் வயிற்றுப்போக்கும் உண்டானது. கடுங்கோபம் கொண்ட மன்னர், பரமார்த்தரை பட்டினிச் சிறையில் அடைத்தார். தண்டனை முடிந்து பசி சோர்வால், வயிறு காய்ந்து தொப்பை இல்லாமல் தள்ளாடி வர," குருவே! எங்கள் லேகியம்தான் உங்கள் தொப்பையைக் கரைத்துவிட்டது" எனச்சீடர்கள் பெருமைகொள்ள," தண்ணீர் கூட இல்லாத பட்டினி சிறையால் இப்படி ஆயிற்றடா முட்டாள்களா" என்று மயங்கி விழுந்தார் முட்டாள்களின் தலைவர் பரமார்த்த குரு.