செயலின் பிரதிபலன்!!!
ஜென் மாஸ்டர் ஒருவர் அவரது சீடர்களுக்கு, அன்றைய போதனையில் அவரவரின் செயல்களுக்கான பிரதிபலனை பற்றி விவரித்து கொண்டிருக்கையில், அதனை ஒரு கதையின் மூலம் விளக்க நினைத்து, கதையை சொல்ல ஆரம்பித்தார். அது "விவசாயி ஒருவர் 1 பவுண்டு வெண்ணெயை ஒரு பேக்கரிக்காரருக்கு விற்று வந்தார். ஒரு நாள் அந்த பேக்கரிக்காரர், விவசாயி கொடுக்கும் வெண்ணெய் ஒரு பவுண்டு அளவு சரியாக உள்ளதா? என்று எடை போட்டு பார்த்தார். அப்போது அளவு குறைவாக இருந்தது என்பதை தெரிந்து கொண்ட அந்த பேக்கரிக்காரர் விவசாயி மீது கடுங்கோபம் கொண்டார். அதனால் ஆத்திரம் அடைந்த அவர், அந்த விவசாயியை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றார்.
அப்போது நீதிபதி விவசாயிடம், "வெண்ணெயை அளந்து பார்க்க எந்த எடை மிசினை உபயோகிக்கிறாய்" என்று கேட்டார். அதற்கு அந்த விவசாயி 'நியாயம்' என்று பதிலளித்தார். பின் நீதிபதியிடம், "நான் பழங்காலத்தவன், என்னிடம் சரியான எடை மிசின் இல்லை. ஆகவே நான் ஒரு அளவுகோல் கொண்டு அளவு செய்வேன்" என்றார். உடனே நீதிபதி "வேறு எப்படி வெண்ணெயை எடை செய்தாய்?", என்று கேட்டார். அதற்கு விவசாயி நீதிபதியிடம் "ஐயா! பேக்கரிக்காரர் என்னிடம் நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே வெண்ணெய் வாங்குவது வழக்கம், நானும் அவரிடமிருந்து ஒரு பவுண்டு ரொட்டியை வாங்கி வருவேன். ஒவ்வொரு நாளும் பேக்கரிக்காரர் ஒரு பவுண்டு ரொட்டியை கொண்டு வந்த அதே சமயம், நானும் அதே அளவில் வெண்ணையை வெட்டி கொடுப்பேன். ஆகவே குறை, குற்றம் சொல்ல வேண்டுமெனில் அது என் தவறு இல்லை, அது முற்றிலும் பேக்கரிக்காரரை சார்ந்தது" என்று சொன்னார்." எனக் கதையை கூறி முடித்துவிட்டார்.
பின் சீடர்களுக்கு, "நாம் மற்றவர்களுக்கு என்ன செய்கிறோமோ, அதே தான் நமக்கும் விதிக்கப்படும்" என்று கூறி விளக்கினார்