இன்ஸ்டண்ட் புளியோதரைப் பொடி
இந்த பொடியை நான் உடனே பயன்படுத்தி விட்டதால் இதில் எந்த Preservative சேர்க்கவில்லை. நீண்ட நாள் வைத்திருந்து பயன்படுத்த வேண்டுமெனில் இதில் Acetic Acid & Tartaric Acid சேர்க்கவேண்டும்.
பரிமாறும் அளவு -2 நபர்
தயாரிக்கும் நேரம் -15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
புளி - சிறிய எலுமிச்சை பழளவு
மிளகு+சீரகம் - தலா 3/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
வெள்ளை எள் -1 டீஸ்பூன்
தனியா -1 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் -1/2 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
வேர்கடலை -1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் -1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*முதலில் வெறும் கடாயில் தனியா, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், எள் மற்றும் காய்ந்த மிளகாய் இவற்றை தனித்தனியாக வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும்.
*தேவையான உப்பையும் வறுத்து எடுக்கவும்.
*பின் புளியை பொடியாக நறுக்கி ஈரம் போக வெறும் கடாயில் வறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி வேர்க்கடலையை வறுத்து வைக்கவும்.
*அதே கடாயில் மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ஆறவைக்கவும்.
*வறுத்த பொருட்கள் ஆறியதும் தனியா, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், எள், வெந்தயம், காய்ந்த மிளகாய் மற்றும் தாளித்த பொருட்கள் இவற்றை சேர்த்து நைசாக பொடித்து தனியாக வைக்கவும்
*பின் உப்பு மற்றும் புளி சேர்த்து பொடிக்கவும்
*இதனுடன் அரைத்து வைத்த பொடியை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
*பின் கடைசியாக வேர்கடலையை சேர்த்து ஒன்றிரண்டாக பொடித்து எடுக்கவும்.
*இதில் Acetic Acid & Tartaric Acid சேர்ப்பதாக இருந்தால் அதையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
*ஆறியதும் காற்று புகாத டப்பாவில் 2 நாள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
பின் குறிப்பு:
* கலந்த சாத வகைகளுக்கு உப்பை வடிக்கும் போதே சேர்த்து விடுவேன்,அதனால் இந்த இன்ஸ்டண்ட் மிக்ஸ்ல் உப்பை குறைத்து சேர்த்துள்ளேன்
புளிசாதம் செய்யும் முறை
தேவையான பொருட்கள்:
உதிராக வடித்த சாதம் -1 கப்
புளிசாத இன்ஸ்டண்ட் மிக்ஸ் -1/4 கப்
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*கடாயில் எண்ணெய் ஊற்றி இன்ஸ்டண்ட் மிக்ஸினை சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கி சாதத்தை சேர்த்து கிளறி 1 மணிநேரம் வைக்கவும்.
*பின் மசால் வடை,உருளை வறுவல் அல்லது புதினா துவையலுடன் பரிமாறவும்.